மெத்தனால் பயன்பாடு ஆவடி போலீசார் விழிப்புணர்வு
தொழிற்சாலை மற்றும் குடோன் உரிமையாளர்களுக்கு, மெத்தனால் உள்ளிட்ட, ரசாயன கலவை பயன்பாட்டிற்கான விழிப்புணர்வை, ஆவடி மாநகர போலீசார் ஏற்படுத்தினர்.
சென்னை செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் ஊராட்சி அருகே, தனியார் உள்ளரங்கில் விழிப்புணர்வு கூட்டம், ஆவடி போலீஸ் கமிஷனர் கீ.சங்கர் தலைமையில் நடந்தது .
அதில், மெத்தனால் உள்ளிட்ட ரசாயன கலவை பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளுக்கு மெத்தனால் பயன்பாடு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
அதை வாங்கி, விற்பது, இருப்பு வைப்பது தொடர்பாகவும், சட்டரீதியான விதிகளை பின்பற்றுவது குறித்தும், அதை முறைகேடாக பயன்படுத்தினால் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்தும், இரு தரப்பினரும் கருத்தை பதிவு செய்தனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது;
‘‘கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு, ரசாயன பொருட்கள் பயன்பாடு மற்றும் இருப்பு வைக்கப்படும் தொழிற்சாலை, குடோன்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.
ரசாயன பொருட்களை, மாற்று வழியில் விற்பனைக்கோ, பிற தேவைக்கோ பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்ப்பது அனைவரின் பொறுப்பாகும்’’ என்றார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில், ஆவடி மாநகர கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன், செங்குன்றம் காவல் மாவட்ட துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சென்னை வடக்கு துணை கமிஷனர் சுந்தர் பங்கேற்றனர்.
ஆவடி கலால் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன், செங்குன்றம் உதவி கமிஷனர் ராஜாராபர்ட், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், அம்பத்தூர் கலால் இன்ஸ்பெக்டர் ரமேஷ், செங்குன்றம் கலால் இன்ஸ்பெக்டர் மலர்செல்வி மற்றும் தமிழ்நாடு டைய்ஸ் கெமிக்கல் மெர்ச்சன்டஸ் அசோஷியேசன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.